தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 
rain

தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை முதல் வருகிற 03ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில்
லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது