விபத்துக்குள்ளான முதலாவது நடைமேடையில் வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கம்

 
Chennai beach

15 மணி நேரத்திற்கு பிறகு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் முதலாம் நடைமேடையிலிருந்து மீண்டும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.    

சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்துக்கு மாலை 4.25 மணியளவில் வந்த மின்சார ரயில், திடீரென அந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு முதலாவது நடைமேடையில் ஏறி அங்குள்ள கட்டுமானம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து விபத்துக்குள்ளான மின்சார ரெயிலை நடைமேடையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். கூடுதல் உதவிக்காக 2-வது நடைமேடைக்கு நவீன எந்திரங்கள் கொண்ட ரெயில் பெட்டியும் உடனடியாக வரவழைக்கப்பட்டது. மேலும் ரெயில்வே என்ஜினீயரிங் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, விபத்துக்குள்ளான 2 பெட்டிகளில் இருந்து மற்ற 10 பெட்டிகளுக்கும் உள்ள இணைப்பை நவீன ‘வெல்டிங்’ எந்திரம் மூலம் ஊழியர்கள்  தனியாக பிரித்தனர்.

Train issue

குறிப்பாக ‘டபிள்யூ.டி.எம்.-7’ எனப்படும் டீசல் என்ஜின் கடற்கரை ரெயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு. விபத்துக்குள்ளான மின்சார ரெயில் என்ஜின் பெட்டியில் இருந்து முதல் வகுப்பு பெட்டியை, நவீன ‘வெல்டிங்’ எந்திரம் கொண்டு ரெயில்வே ஊழியர்கள் பிரித்து எடுத்தனர். இந்த நிலையில் டீசல் என்ஜினையும் தண்டவாளத்தில் இருந்த முதல் வகுப்பு பெட்டியையும் சங்கிலி மூலம் ரெயில்வே ஊழியர்கள் இணைத்து விபத்துக்குள்ளான இரயிலை மீண்டும் பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கே எடுத்துச் சென்றனர். இதனால் விபத்துக்குள்ளான இரயிலானது சுமார் 9 மணிநேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. இதன் பின்னர் சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு முதலாவது நடைமேடையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார இரயில்கள் முதலாம் நடைமேடையில் சுமார் 100 மீட்டருக்கு முன்பாகவே  நிறுத்தப்பட்டு பொதுமக்களை ஏற்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.