"சென்னை காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும்" - அன்புமணி

 
pmk

சென்னை காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை காலநிலை செயல் திட்ட வரைவு அறிக்கையை (Chennai Climate Action Plan – CCAP) எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி ஆங்கிலத்தில் வெளியிட்ட சென்னை மாநகராட்சி, நாளை மறுநாள் செப்டம்பர் 26-ஆம் தேதிக்குள் அதன் மீது பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கையை தமிழில் வெளியிடாமல், மிகக்குறைந்த கால அவகாசத்தில் கருத்துகளைக் கோருவது நியாயமற்றதாகும்.

tn

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீயவிளைவுகளை கட்டுப்படுத்துவதற்காக மாநில அளவிலும், சென்னை மாநகராட்சி அளவிலும் காலநிலை செயல்திட்டத்தை தயாரித்து செயல்படுத்த வேண்டும் என பாமக கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்தது. அதன்பயனாக சென்னை மாநகராட்சி காலநிலை செயல்திட்டத்தின் வரைவு அறிக்கையை கடந்த 12-ஆம் தேதி வெளியிட்டது. சென்னையிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் முழுமையாக அறிந்து கொண்டு கருத்து தெரிவிப்பதற்கு வசதியாக வரைவு அறிக்கை ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அதை செய்யத் தவறிய சென்னை மாநகராட்சி, வரைவு அறிக்கை குறித்த தகவல்கள் மக்களிடம் சென்றடைவதற்கு முன்பாகவே கருத்து தெரிவிப்பதற்கான கெடுவை நாளை மறுநாளுடன் நிறைவு செய்கிறது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கை ஏராளமான குறைகளுடன் உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள 6 தலைப்புகளில் உள்ள 66 இலக்குகள் குறித்த எந்த விளக்கமும் இல்லை. அனைத்து இலக்குகளும் ஒரு வரியில் உள்ளன. சென்னை மாநகரின் காலநிலை செயல்திட்ட அறிக்கையில் காற்று மாசுபாட்டை தடுக்கும் இலக்கு சேர்க்கப்படவில்லை.

anbumani

 எனவே கால நிலை செயல்திட்ட வரைவு அறிக்கையில், ஐநா வாழ்விட அமைப்பின் வழிகாட்டி கொள்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். சென்னை நகருடன் தொடர்புடைய அனைத்து பொது நல அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் பொருள்வாரியாக விரிவான கலந்தாய்வுகளை நடத்த வேண்டும். மேலும் கருத்துக் கேட்புக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும். மக்களின் கருத்துகளை உள்ளடக்கிய சென்னை மாநகருக்கான காலநிலை செயல்திட்டத்தை உருவாக்கி முழுமையாக செயல்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.