மழைநீர் வடிகாலில் விதிகளுக்கு புறம்பாக கழிவுநீர் இணைப்புகள் - ரூ.19.52 லட்சம் அபராதம்

 
chennai corporation

சென்னையில் மழைநீர் வடிகாலில் விதிகளுக்குப் புறம்பாக கழிவுநீரை வெளியேற்றி வந்த 2983 இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளதோடு, 19.52 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 3799 கழிவுநீர் இணைப்புகள் மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இதனையடுத்து, மாநகராட்சி உதவி / இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர், கழிவுநீர் அகற்றல் வாரிய உதவி பொறியாளர் கொண்ட குழு சென்னை மாநகராட்சி முழுவதும் விதிகளுக்கு புறம்பாக இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்கள் குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் விதிகளுக்கு புறம்பாக சென்னை மாநகரட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2983 இணைப்புகள் உள்ளது கண்டறியப்பட்டது. 
அதிகபட்சமாக சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டலமான 6 முதல் 10 வரை 1628 சட்டத்திற்குப் புறம்பான முறையற்ற கழிவுநீர் இணைப்புகள் உள்ளது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து விதிகளுக்கு புறம்பாக மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டிருந்த, கழிவுநீர் இணைப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2983 இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளதோடு, 19.52 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.