ரூ.63 கோடி செலவில் நவீன கழிவறைகள் - சென்னை மாநகராட்சி திட்டம்..

 
நவீன பொதுக்கழிவறை

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ்  நவீன வசதிகளுடன் சென்னை முழுவதும் கட்டணமில்லா தூய்மையான கழிவறை அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  

சென்னை முழுவதும் வசிக்கும் மக்களுக்கு கட்டணமில்லா தூய்மையான கழிவறை  அமைக்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கி சென்னை மாநகராட்சி தனது பணிகளை தொடங்கியிருக்கிறது.  ஒரு மாநகரத்தின்  தரம் என்பது  கல்வி, சுகாதாரம், தரமான சாலைகள், பொது கழிவறைகள் போன்றவை  முக்கிய இடம் வகிக்கும்.  அந்த வகையில், சென்னை மாநகரை பொறுத்தவரையில் மற்ற அனைத்தும் ஓரளவுக்கு எட்டப்பட்டுவிட்டாலும்,   பொதுமக்கள் தேவைக்கு நிகரான பொதுக்கழிவறைகள் என்கிற  நிலையை மட்டும் தற்போது வரை எட்ட முடியவில்லை. இதற்கிடையே சென்னையை மேம்படுத்துவதற்காக  சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை முழுவதும் பொதுமக்களுக்கு கட்டணமில்லா நவீன கழிவறை  அமைக்கும் பணிகளை  சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி

பொதுக் கழிப்பிடங்கள் என்றாலே  அசுத்தம், துர்நாற்றம் போன்ற  எண்ணங்களே முதலில் வரும்.  இந்த எண்ணங்களை மாற்றி பொது கழிவறை பயன்பாட்டை  மக்களிடம் ஊக்குவிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி,  மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள  9 பொது கழிப்பறைகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்தியுள்ளது.  கழிவறைகளின்  வெளி சுற்றில் ஓவியங்கள், பெண்களுக்கான சானிடரி நாப்கின் வசதிகள் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வசதிக்காக  சாய்தள பாதை, தடையில்லா தண்ணீர் விநியோகம் போன்ற வசதிகள் செய்து மேம்படுத்தியுள்ளனர்.  

ரூ.63 கோடி செலவில் நவீன கழிவறைகள் - சென்னை மாநகராட்சி திட்டம்.. 

இந்நிலையில்  சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக,  சென்னை முழுவதும் ரூ. 63 கோடி செலவில் 500 கழிவறைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் உள்ள இ - டாய்லெட்டுகளையும் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில்  மேம்படுத்தப்பட்ட கழிவறைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும்  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.