ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு

 
ops

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சி சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றியை எதிர்த்து மிலானி என்ற வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். 

high court

அந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவில் சொத்துக்கள், கடன் விவரங்களை மறைத்ததால் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதமானது எனவும் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரியும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் வேட்புமனுவில் சொத்து மற்றும் கடன் விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு தான் வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும், இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனுவை ஏற்ற நீதிபதி, வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.