மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் - அதிரடி தீர்ப்பு

 
high court

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரியும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியது போன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும். தனியார் பள்ளி மாணவர்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க கோரியும் வழக்கு தாக்கல் செய்தார். இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருப்பதாக கருத்து தெரிவித்தனர். இட ஒதுக்கீடு சட்டத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் இட ஒதுக்கீடு வழக்க எதிர்ப்பு தெரிவித்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.