100 ரூபாயை நெருங்கும் டீசல் விலை - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

 
petrol

சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டர் ரூ.108.96க்கும், டீசல் லிட்டர் ரூ.99.04க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.  அதன்படி 137 நாட்களுக்கு பின்னர் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர தொடங்கியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை  மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும்  உயர்ந்துள்ளது. கடந்த மாதம் சிலிண்டர் விலை   ரூ.50 உயர்ந்து சாமானியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதேபோல்  பெட்ரோல், டீசல் விலையும்  தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

petrol

அதன் தொடர்ச்சியாக  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இன்றுடன் சேர்த்து கடந்த 13 நாட்களில் 11 வது தடவையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது.  இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்த்தப்பட்டு, 108 ரூபாய் 96 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 99 ரூபாய் 04 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதன் மூலம் கடந்த 13 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 7 ரூபாய் 56 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7.61 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.108.21 க்கு விற்பனை செய்யப்பட்டது.  அதேபோல் டீசல் 76 காசுகள் அதிகரித்து ரூ.98.21க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோ டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.