"நீ தாழ்த்தப்பட்டவள்".. சிதம்பரம் கோயிலில் பக்தையை ஆபாசமாக திட்டிய தீட்சிதர்கள் - வன்கொடுமை வழக்குப்பதிவு!

 
சிதம்பரம் நடராஜர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் தான் நிர்வாகம் செய்கிறார்கள். கோயிலில் பூஜை செய்கிறார்கள். இச்சூழலில் கடந்த 13ஆம் தேதி சிதம்பரத்திலுள்ள பழைய புவனகிரி சாலை பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்கிற ஜெயஷீலா (36) என்பவர் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

அப்போது ஜெயஷீலா சிற்றம்பல மேடையில் ஏறி சாமியை தரிசிக்க சென்றுள்ளார். உடனே அங்கிருந்த தீட்சிதர்கள் சிலர் ஜெயஷீலாவை ஆபாசமாக திட்டி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து ஜெயசீலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தாழ்த்தப்பட்ட பெண்ணான தன்னை கோயில் தீட்சிதர்கள் ஆபாசமாகத் திட்டி சாமி தரிசனம் செய்யவிடாமல் திருப்பி அனுப்பியதாக புகார் கொடுத்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் பெண் பத்தரை அவதூறாக பேசியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 20 தீட்சிதர்கள் மீது சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் சமூக வலைதளவாசிகளும் தீட்சிதர்களின் இந்த செயலுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.