அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

 
MK Stalin

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  'சமத்துவ நாள் ' உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு முதலமைச்சர் சாதி வேறுபாடற்ற சமத்துவ சமூகம் அமைக்க பாடுபடுவோம் , சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டோம் என்பது உள்ளிட்ட  சமத்துவ நாள் உறுதிமொழியை  ஏற்றுக்கொண்டார். சட்டமன்றத்தில் விதி 110-ன்கீழ் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்ட அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை மணிமண்டப நிர்வாகத்திடம் முதலமைச்சர் ஒப்படைத்தார்.

CM

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் அமைச்சர்கள் எ.வ. வேலு , பொன்முடி ,  மா.சுப்பிரமணியன் , சேகர்பாபு , செந்தில் பாலாஜி , மு.பெ.சாமிநாதன் , மெய்யநாதன் , நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை மேயர் பிரியா , சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்