செல்போனில் பேசியதை கண்டித்த தந்தை - கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

 
suicide

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே செல்போனில் பேசியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் லட்சுமணன் என்பவர் தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார். இவருடைய இளைய மகள் கீர்த்தனா நம்பியூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த கீர்த்தனா, தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த ஒரு வாரமாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் அவரது தந்தை காலை வேலைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பாட்டுக்கு வீட்டிற்கு வந்த போது கீர்த்தனார் யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு ஆத்திரமடைந்த அவரது தந்தை கீர்த்தனாவை கண்டித்ததோடு, அவர் பேசிக்கொண்டிருந்த செல்போனை பிடுங்கிக்கொண்டு மீண்டும் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கீர்த்தனா வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

suicide

இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தந்தை லட்சுமணன் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அவரது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவர் மகளை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், கீர்த்தனாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனில் பேசியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.