திமுக கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடம் - கார்த்தி சிதம்பரம்

 
karthik chidambaram karthik chidambaram

திமுகவுடன் கூட்டணி வைத்தும் அரசாங்கத்தில் இடம் கிடைக்காததால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தர்ம சங்கடமான நிலையில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 
கோவையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் ஆளும் கட்சியோடு நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால் அரசாங்கத்திலே எங்களுக்கு இடம் கிடையாது. ஆளும் கட்சியோடு நாங்கள் ஒத்துப்போக வேண்டும். ஏனென்றால் நாங்கள் அவர்களோடு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால் அரசாங்கத்தில் இடம் பெறாமலும், எதிர்க்கட்சியாகவும் எங்களால் செயல்பட முடியாது. இதுபோன்ற நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கும்போது யார் தலைவராக இருந்தாலும் எங்களுக்கு இந்த தர்ம சங்கடமான நிலை இருக்கத்தான் செய்யும். 

மத்தியில் பாரதிய ஜனதா அரசு சாதாரண மக்கள் மீது வரி சுமையை அதிகரித்துக் கொண்டே செல்வது தான் அவர்களுடைய வழக்கம். அவர்களின் பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையாக இருந்தாலும் சரி, குழப்பமான ஜி.எஸ்.டியாக இருந்தாலும் சரி, பெட்ரோல் மீது வரி சுமத்துவதாக இருந்தாலும் சரி, தற்போது சுங்கச்சாவடியில் கட்டணத்தை உயர்த்துவதாக இருந்தாலும் சரி பொதுமக்கள் மீது வரியை அதிகரித்துக் கொண்டே தான் செல்வார்கள். இந்த பிரதமர் மற்றும் நிதி மந்திரி இருக்கும் வரை சாதாரண மக்களுக்கு எந்தவித சலுகையும் கிடைக்காது. தமிழகத்தில் நடக்கும் தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். மக்கள் எளிதில் அணுகக்கூடிய முதல்வராக செயல்படுகிறார். அவரை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.