பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

 
covai protest

கோவை மாவட்டம் அவினாசி அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் பூ.சா.கோ.கலை, அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரியான இந்த கல்லூரியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கையில் கருப்புக் கொடி மற்றும் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

covai protest

இந்நிலையில், மாணவர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களுடன் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கல்லூரியில் சமூக நீதியை காக்க வேண்டும், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நலனை காக்க வேண்டும், காலியாக உள்ள 70 ஆசிரியர்கள் பணியிடங்கள், 24 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உயர்கல்வி தனியார் மயமாவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

covai protest

மேலும் ஆசிரியர்களின் பணிப்பழுவை முறையாக சட்டப்படி கடைபிடிக்க வேண்டும், ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், மறைமுகமாக பணியிடத்தை குறைக்கும் முடிவை வெளியிட வேண்டும், கல்லூரி முதல்வர் ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.  சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக மாணவர்களின் போராட்டம் நீடித்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆசிரியர்களுடன் சேர்ந்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.