அதிகாலையில் வெடித்துச் சிதறிய பட்டாசு கடை.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு..

 
அதிகாலையில் வெடித்துச் சிதறிய பட்டாசு கடை..  கிருஷ்ணகிரியில் பரபரப்பு..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே வைஷ்னவி நகர் பிரதான சாலையில் ஏராளமான நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றன.  அந்தவகையில், இந்த பகுதியில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையும்  இயங்கி வந்தது.  இந்தக் கடையில் இன்று திடீரென அதிகாலை 4 மணியளவில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுக் கடை என்பதால், தீ மளமளவென பரவி கடை முழுவதிலும் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. 

பட்டாசு

அப்போது அந்த வழியாக ரோந்து பணிக்காகச் சென்ற காவலர்கள் பார்த்து உடனடியாக ஓசூர் மாநகராட்சி தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.  இதனையடுத்து உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்,  தீயை கட்டுப்படுத்த முயன்றும்  முடியவில்லை. பின்னர் ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.  சுமார் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி  தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

காவல்துறையினரின்  முதல்கட்ட விசாரணையில், மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.  கடை உரிமையாளார்  வடிவேல், வேலூர் மாவட்டத்தில்  உரிமம் பெற்று இங்கு கடை நடத்தி வந்ததாக தெரிகிறது. வேலூர் மாவட்டத்தில் பெற்ற உரிமம் என்றால் சுமார் 1500 கிலோ வரை மட்டுமே இருப்பு வைக்கலாம்.  ஆனால் கடையில் சேதமான பொருட்களில் மதிப்பு பல லட்சம் இருக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு கடைக்கு அருகில் ஏராளமான  குடியிருப்புகள் மற்றும் உணவகங்கள், தேநீர் கடைகள், தனியார் மருத்துவமனை  போன்றவை அமைந்துள்ளது.   இந்த பகுதி எப்போதும் அதிக மக்கள் நடமாட்டத்துடனேயே இருக்கும். அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பட்டாசு  கடை தீ விபத்து

அத்துடன்  பட்டாசு கடை உரிமையாளர் வடிவேல் சிவகாசிக்கு சென்றுள்ளதால், கடையில் தீ விபத்தில் சேதமான பொருட்களின் மொத்த மதிப்பு  தெரியவில்லை.  வடிவேல் வந்த பின்னரே முழு சேத விவரங்கள் தெரியவரும்.  இருப்பினும், சேதமதிப்பு பல லட்ச ரூபாய் அளவில் இருக்கும் என  கூறப்படுகிறது.  இந்த விபத்து காரணமாக ஓசூர் டி.எஸ்.பி. அரவிந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்களை அனுமதிக்காமல் ,   வாகனங்கள்  மாற்று பாதையில் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.