தீவிரமடையும் சுங்கச்சாவடி தொழிலாளர் போராட்டம் - ஒன்றிய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்!!

 
mutharasan

 சுங்கச்  சாவடி தொழிலாளர் போராட்டம் நடத்தி வரும் நிலையில்  ஒன்றிய அரசு விரைந்து  தீர்வு காண வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சியில் இயங்கி வரும் நெடுச்சாலை  சுங்கச் சாவடியில் 120 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தொழிற்சங்கம் அமைத்து, சட்டபூர்வ உரிமைகளை அமலாக்குமாறு நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகம் 28 முன்னணி தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை  மேற்கொண்டது.

tn

நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும், ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தொழிலாளர்கள் அனைவரும் இம்மாதம் முதல் தேதியில் (01.10.2022) முதல், சுங்கச் சாவடியில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அவர்களது குடும்பத்தினரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தொழிலாளர் போராட்டத்தில் தலையிட்டு தீர்வுகாண வேண்டிய ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத்துறை மௌனம் காத்து, தனியார் கார்ப்ரேட் நிறுவனத்துக்கு ஆதரவு காட்டி வருகிறது. இந்த நிலையில் கடந்த 04.10.2022 முதல் தொழிலாளர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

central

மூன்றாவது நாளான இன்று (07.10.2022) ஜெகதீசன் த/பெ. நாகராஜன் என்ற தொழிலாளி மயக்கமடைந்த நிலையில், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போராட்டம் மேலும் தீவிரமடைந்தது, விரிவடையும் முன்பு ஒன்றிய அரசு தொழிலாளர் கோரிக்கைகளில் தீர்வு கண்டு, போராட்டத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், நூற்றுக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் போராடி வரும் நிலையை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு எடுத்துக் கூறி, சுமூகத்  தீர்வு காண அழுத்தம் தர வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.