ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

 
vijayakanth

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய காலி பணியிடங்களை உருவாக்க வேண்டும் எனவும்,  இட ஒதுக்கீடு முறையை சரியாக பின்பற்றி, டெட் மதிப்பெண்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு முன் வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

vijayakanth

மேலும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சரியான எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என்றும், தற்போது தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு 50 லிருந்து 58 ஆக அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.  இதேபோல் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 58 ஆக குறைக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமன தேர்வு என்ற அரசாணை 149ஐ நீக்கம் செய்துவிட்டு, 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள 117வது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.