இந்தி படிப்பதால் எங்களுக்கு என்ன பயன் ? - தயாநிதிமாறன் எம்.பி. கேள்வி

 
dhayanithi maran

நாங்கள் எந்த மொழிக்கும் எதிர்ப்பாளர்கள் அல்ல என்றும் இந்தி படிப்பதால் எங்களுக்கு என்ன பயன், எங்கள் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் வரப்போகிறது? என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
சென்னை திருவல்லிக்கேணியில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா  நடைபெற்றது. இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் பேசியதாவது: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படி கோடை காலத்தையொட்டி திருவல்லிக்கேணி பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்திருக்கிறோம். இது போன்று 20 இடங்களில் தண்ணீர் - மோர் பந்தல் திறந்து மக்களின் தாகம் தீர்க்கவுள்ளோம். 

dhayanithi maran

நமக்கு இருமொழி கொள்கை தான். தமிழும் வேண்டும்,  ஆங்கிலமும் வேண்டும். ஆங்கிலம் படித்ததால் சுந்தர் பிச்சை உலகத்தின் பெரிய நிறுவனமான கூகுளில் தலைவராக பணி புரிகிறார். ஆனால் இந்தி படித்த பலரும் சிறிய தொழிலாளர்களாக வேலை தேடி கொண்டு இருக்கின்றனர். ஆங்கிலம் கண்டிப்பாக தேவை. ஆங்கிலம் படித்தால் உலகின் அனைத்து இடங்களிலும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.  நாங்கள் எந்த மொழிக்கும் எதிர்ப்பாளர்கள் அல்ல. உங்கள் இந்தி படிப்பதால் எங்களுக்கு என்ன பயன். எங்கள் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் வரப்போகிறது?. எங்கள் செம்மொழி தமிழுக்கு என்ன குறை..தமிழை நாங்கள் வளர்த்து வருகிறோம்.  உங்களுக்கு உங்கள் மொழியை தவிர வேறு எந்த மொழியும் வரக்கூடாது. இதை தான் ஒவ்வொரு முறையும் அமித் ஷா செய்கிறார்.