திமுக கவுன்சிலர் தந்தை அடித்துக் கொலை!கும்பகோணத்தில் பரபரப்பு

 
d

 திமுக கவுன்சிலர் தந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த பணம், நகைகளை  கொள்ளையடித்து சென்றுள்ளதால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 கும்பகோணம் அடுத்த பாபநாசம் தாலுக்கா ரகுநாதபுரம் மெயின் ரோட்டில் வசித்துவந்தார் அப்துல் ரசாக்(வயது63). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் ஊருக்கு வந்ததும் ராஜகிரியில் லுங்கி கடை வைத்து நடத்தி வந்தார்.  

 அப்துல் ரசாக்கிற்கு 4 மகன்கள் ஒரு மகள்.   ஒரு மகன் தவிர மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டதால் அனைவரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.  அப்துல் ரசாக்கின் மகள் ஹதிஜா பிவி கும்பகோணம் நகராட்சியில்  3-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.

d

 வழக்கம்போல் அப்துல் ரசாக் ராஜகிரியில் கடை வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு சென்றிருக்கிறார்.  இன்று காலையில் வெகு நேரமாகியும் ராஜகிரியில் அவரது கடை திறக்காததால் அப்பகுதியில் உள்ளவர்கள் அப்துல் ரசாக்கின் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.   இதையடுத்து முகமது ஆரிப் தந்தையை சென்று பார்த்திருக்கிறார்.   அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும் உள்ளே தந்தை காயங்களுடன் இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

 அய்யம்பேட்டை போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்க,   அவர்கள் விரைந்து வந்து ஆய்வாளர் வனிதா மட்டும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.   இதையடுத்து கைரேகை,  நிபுணர் தடயவியல் அறிவியல் நிபுணர் ஆகியோர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.   மோப்பநாய் கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.   பாபநாசம் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்துள்ளார்.   கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.