கதவை உடைத்து காப்பாற்றச்சொன்ன அமைச்சர் - இளம்பெண்ணை காப்பாற்றிய திமுக நிர்வாகிகள்

 
smm

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக நிர்வாகிகள் காப்பாற்றியுள்ளனர்.   இந்த நெகிழ்ச்சிக்கான சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது .

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.   இதற்காக கடைசிநாள் பிரச்சாரத்தில் தீவிரமாக அனைத்து கட்சியினரும் ஈடுபட்டிருந்தனர்.  

 இந்த நிலையில் திருவள்ளூர் நகராட்சியில் ஆயில் மில் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் திமுகவினர் மும்முரமாக இருந்தனர்.   அப்போது சட்டமன்ற உறுப்பினர் தற்காலிக அலுவலகம் அருகே அனைவரும் தேநீர் அருந்த சென்றிருக்கிறார்கள்.   அப்போது அருகிலிருந்த வீட்டில் இரண்டு இளைஞர்கள் வீட்டின் பின்பகுதி கதவை தனது கால்களால் எட்டி உதைத்து கொண்டிருந்திருக்கிறார்கள்.  

su

 பிரச்சாரத்தில் இருந்து வந்த திமுகவினர் அந்த வீட்டுக்கே சென்று என்னவென்று விசாரித்ததில் உள்ளே ஒரு பெண் குடும்பத்தகராறு காரணமாக கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர்.  இதைக் கேட்டதும் பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு அனைவரும் அங்கு சென்று கதவை உடைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

 தகவல் அறிந்ததும் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர்,   திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் அவரை மீட்கச் சொன்னதும் கிரிக்கெட் மட்டையை கொண்டு திமுகவினர் அந்த கதவை உடைத்து உள்ளே சென்று இருக்கிறார்கள்.  

 அப்போது மின்விசிறியில் புடவையால் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த பெண்ணை உயிருடன் மீட்டிருக்கிறார்கள்.   உடனே ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டிருக்கிறது.   சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்  நேரில் சென்று ஆறுதல் சொல்லி தேவையான உதவிகளை செய்வதாக கூறியிருக்கிறார்.

 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுகவினர் உயிருடன் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.