அரை மணிநேரத்தில் தீர்ந்துபோன தரிசன டிக்கெட்.. ஏமாந்துபோன பக்தர்கள்..

 
thiruvannamalai

திருவண்ணாமலை தீப தரிசன  ஆன்லைன் டிக்கெட்  அரைமணி நேரத்தில் தீர்ந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.  

திருவண்ணாமலை  அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்துக்காக  ஆன்லைன் மூலமாக 1,600 அனுமதி சீட்டுகள் இன்று (4ம் தேதி) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.  டிச.6-ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபத்தை தரிசிக்க ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், மாலை 6 மணிக்கு மகா தீபத்தை தரிசிக்க ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகளும்  ஆன்லைனில் வெளியிடப்பட்டன.  

திருவண்ணாமலையில் மகா தீபம்

இந்த அனுமதி சீட்டுகள்  https://annamalaiyar.hrce. tn.gov.in என்ற கோயில் இணையதளம்  வழியாக இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.  இதில்  ஒரு ஆதார் அட்டைக்கு,  ஒரு கட்டண சீட்டு மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்ட  சுமார் அரைமணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்து விட்டன.  இதனால் தீப தரிசனத்திற்காக  டிக்கெட் புக்கிங் செய்ய காத்திருந்த ஏராளமான பக்தர்கள்  ஏமாற்றம் அடைந்தனர். ஆன்லைன் மூலம்  கட்டண டிக்கெட் பதிவிறக்கம் செய்தவர்கள், பரணி தீப தரிசனத்துக்கு டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. .

அதேபோல், மகா தீப தரிசனத்துக்கு டிசம்பர் 6-ந்தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டண அனுமதி சீட்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன், அம்மணி அம்மன் கோபும் (வடக்கு கோபுரம்) வழியாக குறிப்பிட்ட நேரத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு 1800 425 3657 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.