மீனவர் மீது துப்பாக்கிச்சூடு : விசாரணை நடத்த உத்தரவு - பாதுகாப்பு துறை விளக்கம்

 
rameswaram

தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை விளக்கம் அளித்துள்ளது. 

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 10 பேர் கொண்ட மீனவர் குழு கடலுக்கு மீன் பிடிக்க சென்றள்ளது.  மீனவர்கள் கோடியக்கரை ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது,  ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படை சேர்ந்த வீரர்கள் சந்தேகத்தின் பேரில் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் மீன்பிடி படத்தின் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உள்ளன. அத்துடன் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவர் காயமடைந்துள்ளார்.இது குறித்து இந்திய கடற்படையினர் உடனடியாக உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை முகாமிற்கு தகவல் தெரிவித்த நிலையில் கடற்கரை தளத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேரடியாக நடுக்கடலுக்கு சென்று படுகாயம் அடைந்த மீனவரை மீட்டு முகாமுக்கு அழைத்து வந்து முதலுதவி அளித்துள்ளது.பின்னர் கடற்படை முகாமிலிருந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மீனவர் வீரவேல் அழைத்து செல்லப்பட்ட நிலையில்,  மேல் சிகிச்சைக்காக மதுரை  அரசு ராஜாஜி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினார். 

shooting

இந்நிலையில், பாதுகாப்பு துறை இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள பால்க் விரிகுடா பகுதியில் இந்திய கடற்படை கப்பல் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. 21ந் தேதி அதிகாலையில், சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கண்ட இந்திய கடற்படையினர் அந்த படகை நிறுத்துமாறு பல முறை எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் படகு நிற்காததால், அதை நிறுத்தும் வகையில் எச்சரிக்கை முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த படகில் இருந்தவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த நபர், முதலுதவி சிகிச்சைக்கு பின், இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். பின்னர் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.