கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் உள் பிரகாரத்தில் தங்க அனுமதியில்லை.. - ஆட்சியர் அறிவிப்பு..

 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின்  போது பக்தர்கள் உள் பிரகாரத்தில் தங்கி விரதமிருக்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்   வருகின்ற -25-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்க உள்ளது.  தொடர்ந்து  சூரசம்ஹார நிகழ்ச்சி 30-ந் தேதியும்,  திருக்கல்யாணம் 31-ம் தேதியும்  நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் கோவிலில் பக்தர்களுக்காக நடைபெற்று வரும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை   மாவட்ட  ஆட்சியர்  செந்தில்ராஜ்  ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கந்தசஷ்டி திருவிழாவில் இந்த ஆண்டு கோவில் உள் பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் கந்த சஷ்டி விழாவில். விரதம் இருத்தா பக்தர்கள் தங்குவதற்கு கன வசதியாக கோவில் வளாகத்தில் 12 இடங்களில் தற்காலிக தங்கும் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் & திருக்கல்யாணம்

அதேபோல், கோவில் வளாகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 350 கழிப்பறைகளுடன், கூடுதலாக 100 தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட உள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 2 ஆயிரத்து 729 போலீசார் மற்றும் 300 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  கோவில் வளாகத்திள் 4 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படும். திருவிழா காலங்களில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் 5 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்

  பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.  மேலும் கூடுதலாக ரெயில்கள் இயக்க ரெயில்வே நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   தற்போது கோவில் வளாகத்தில் 80 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 50 கேமிராக்கள் கூடுதலாக பொறுத்தப்படும். அதேபோல் 3 ட்ரோன் கேமிராக்கள் மூலம் கடற்கரை முழுவதும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.