நீலகிரி மாவட்டத்திற்கு பேரிடர் மீட்பு படையினர் வருகை

 
nilagiri

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மீட்பு பணிகளுக்காக தமிழக பேரிடர் மீட்பு படையினர் 80 பேர் அங்கு சென்றுள்ளனர். 

நீலகரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கூடலூரில் தொடரும் மழையால் ஆறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் சாய்ந்து, மண்சரிவு ஏற்பட்டு அடிக்கடி வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இதேபோல் பல்வேறு பகுதிகளில் மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து மற்றும் மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு துறையினருடன் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள, சென்னையிலிருந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள், 80 பேர் கூடலுார் வந்தடைந்தனர். அவர்கள் இரு பிரிவாக பிரித்து, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இதனிடையே இன்றும், நாளையும் நீலகரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.