திரௌபதி முர்முவுக்கு 60 சதவீதம் வெற்றி வாய்ப்பு

 
Draupadi Murmu 1

குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் போட்டியிடும், திரௌபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், அவர் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் இந்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,  புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டார். இருவரும் தற்போது தங்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சிரோமணி அலிகா தளம், தமிழகத்தில் அதிமுக, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

draupadi

இதேபோல் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,  திரௌபதி முர்முவுக்கு, அந்த கூட்டணி மட்டுமின்றி, பெரும்பாலான மாநில கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் அவர், 60 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று, அவர் வெற்றி பெறுவது உறுதி என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மொத்தமுள்ள 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 ஓட்டுகளில், திரவுபதிக்கு 6.67 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண், நாட்டின் முதல் குடிமகள் அரியணையில் அமர்வதற்கான வாய்ப்பு உறுதியாகி உள்ளது.