இன்று சென்னை வருகிறார் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு

 
draupadi

குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக இன்று சென்னை வருகிறார். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,  புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டார். இருவரும் தற்போது தங்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். யஷ்வந்த் சின்ஹா நேற்று முன் தினம் சென்னை வந்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டினார். 

draupadi murmu

இந்நிலையில் தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக புதுச்சேரிக்கு வருகை தரும் திரௌபதி முர்மு, பிற்பகல் 1:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து தனி விமானத்தில் மதியம் 2:00 மணிக்கு சென்னை வருகிறார். பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மாலை 4:00 மணிக்கு பா.ஜ., - அ.தி.மு.க., - பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார். மாலை 5:00 மணிக்கு தனி விமானத்தில் சென்னையில் இருந்து டில்லி செல்கிறார். அ.தி.மு.க.வில் பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையிலான மோதல் காரணமாக இருவரையும் தனித்தனியே திரௌவுபதி முர்மு சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.