"அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு; அரசு வேலை" - தமாகா கோரிக்கை!!

 
ttn

அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடையும் , அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசிற்கு சொந்தமான , அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு 1996 ஆம் ஆண்டு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்துவது வருந்ததக்கது . அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு தேவையான மூலப்பொருள்கள் , புதுப்பாளையம் , ரெட்டிபாளையம் , பெரியநாகலூர் , வாலாஜாநகரம் , கயர்லாபாத் , அமீனாபாத் ஆகிய பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் கிடைகிறது . 

gk

ஆகவே அரசின் வேண்டுகோளுக்கு அங்குள்ள 600 விவசாயிகள் அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தனர் . நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் . 25 ஆயிரம் இழப்பீடு அளித்து , அரசு நிலத்தை கையகப்படுத்தியது . அதோடு நிலம் அளித்த விவசாயி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்து இருந்தது . 

நெல் , சோளம் , கேழ்வரகு , கடலை , எள் போன்ற பணப் பயிர் செய்யும் எங்களுக்கு இந்த இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை , மேலும் உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர் . 
ஆனால் அவற்றிற்கு அரசு செவிசாய்க்காததால் 400 - க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் . அவர்களின் வழக்கை விசாரித்த அரியலூர் சார்பு நீதிமன்றம் அவர்களுக்கு , கூடுதல் இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அரசு சிமெண்ட் ஆலை வழங்க வேண்டும் , என்றும் அதனை வட்டியுடன் சேர்த்து ரூ .8 லட்சம் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது . 

tn

ஆனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடை அளிக்காமல் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது . இது நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல் இருக்கிறது . மக்களை காக்க வேண்டிய அரசே அவர்களை எதிர்த்து வழக்கு தொடுப்பது வேதனைக்குரியது . நிலம் கொடுத்த விவசாயிகள் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் , உரிய இழப்பீடையும் , நீதிமன்ற உத்திரவுப்படி காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதை அரசு பரிசீலனை செய்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.