போதை பொருள் விற்பனையால் தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு - இபிஎஸ் குற்றச்சாட்டு

 
eps

போதைப் பொருள் விற்பனையால் தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் காவல் நிலைய மரணங்கள் அதிகரித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தூங்குபவர்களை எழுப்பலாம்-தூங்குவது போல் நடிப்பவர்களை தலைகீழாக நின்று போராடினாலும் எழுப்ப முடியாது." கஞ்சா விற்பனை முழுமையாக தடுத்து நிறுத்தப்படும் என்றும், அதற்காக ஆபரேஷன் கஞ்சா 2.0 ஒன்றை ஆரம்பித்த தமிழ்நாடு காவல்துறை, கஞ்சா கடத்தல் விற்பனையை எவ்வளவு தடுத்தது என்றும், எத்தனை பேர் பிடிபட்டனர் என்றும், எவ்வளவு பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டது என்பதையும் விளக்க வேண்டும். மேலும், ஆபரேஷன் கஞ்சா 2.0 வெற்றி எனில், ஏன் தற்போது ஆபரேஷன் கஞ்சா 3.0 நடவடிக்கையினை காவல்துறை தொடங்கியுள்ளது என்றும், காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கஞ்சாவை வயது வித்தியாசம் இல்லாமல் 18 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். 

eps

கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, நான்கு பேர் அடங்கிய கஞ்சா போதை கும்பல், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆங்காங்கே உள்ள கடைகளில் நுழைந்து, கடை உரிமையாளர்களை கத்தி மற்றும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவர்களைத் தாக்கி, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். அதே போல், இரண்டு நாட்களுக்கு முன்பு குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் கவுதம் என்பவர் திருமுடிவாக்கத்தில் சொந்தமாக பல் மருத்துவமனை நடத்தி வருவதாகவும், ஒருசில நாட்களுக்கு முன்பு மருத்துவர் கவுதம் மருத்துவமனைக்குச் சென்ற கஞ்சா கர்ணா உள்ளிட்ட மூன்று நபர்கள், மருத்துவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், மாமூல் தர மறுத்த மருத்துவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றுவிட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் குற்றவாளிகள் கஞ்சா போன்ற போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கஞ்சா எங்கிருந்து கடத்தப்பட்டு வருகிறது? இதுவரை முழுமையாக கண்டுபிடிக்க முடியாதது ஏன்? கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கைது செய்ய தடுப்பவர்கள் யார்? கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்பதில் ஐயமில்லை. 

கடந்த 19 மாதகால தி.மு.க. ஆட்சியில், காவல் நிலையங்களில் நடைபெற்ற, அத்துமீறல்களையும், அதனால் வழக்குகளின் பெயரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அகால மரணமடைந்ததையும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவையும், போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளது. நடைபெறும் படுபாதக செயல்களைத் தடுக்க இயலாத, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எனது கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், தவறுகளை மறைக்கும் வகையில் பூசி மொழுகும் வேலையை செய்து வருகிறார்கள். 

கடந்த 20.12.2022 அன்று, சென்னை, திரு.வி.க. நகரைச் சேர்ந்த 26 வயதுடைய தினேஷ்குமார் என்பவர் அடையாறு துரைப்பாக்கம் பகுதியில் பேருந்தில் செல்லும்போது ஒரு பயணியிடம் இருந்து செல்போனை திருடியதாக பொதுமக்களால் பிடிக்கப்பட்டு துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். துரைப்பாக்கம் காவல் துறையினர் தன் கணவர்மீது தாக்குதல் நடத்தியதால்தான் மரணமடைந்தார் என்று அவரது மனைவி திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தினேஷ்குமாரின் மர்ம மரணம் குறித்து இந்த அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், துரைப்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒருசில காவலர்களை இடமாற்றம் செய்திருப்பதாகவும் கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ளது. ஒருசில காவலர்களின் அதிகார வரம்பு மீறல்களினால் இதுபோன்ற நிலை தொடருமானால், புகார் கொடுக்கக்கூட பொதுமக்கள் காவல் நிலையம் செல்ல அஞ்சுவார்கள். தமிழகம் முழுவதும் காவல் துறையினர் போதைப்பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடமாட விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கஞ்சா உட்பட பல போதைப்பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து விலை உயர்ந்த போதைப்பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன இனியாவது காவல் துறையினரை தங்களது ஏவல் துறையாக பயன்படுத்தாமல், அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.