திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

 
EPS

திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான் எனவும், திராவிட மாடல் என சொல்வதற்கு மு.க.ஸ்டாலின் என்ன செய்தார்? என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சிவகாசி புறப்பட்டு சென்றார். சிவகாசி அருகே திருத்தங்கலில் காலை 10 மணிக்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.  

eps

பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 52 லட்சம் மாணவர்களுக்கு வழங்கிய லேப்டாப் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினோம்.ஆனால் நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து திமுக.,வினர் மாற்றி, மாற்றி பேசுகின்றனர். நாங்கள் கொண்டுவந்த திட்டங்கள், மருத்துவக் கல்லூரிகளுக்கு நீங்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கின்றனர்.நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பது வேதனையாக உள்ளது. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளார்.  

திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான். திராவிட மாடல் என சொல்வதற்கு ஸ்டாலின் என்ன செய்தார்?  உயர்கல்வி அமைச்சர், பெண்கள் பஸ்சில் ஓசியில் செல்வதாக கூறுகிறார். அது மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் கொடுக்கின்றனர். அதனை கொச்சைப்படுத்துகிறார்.இதற்கெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் திமுகவிற்கு பாடம் கொடுப்பார்கள். மக்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.