வனப்பகுதி மக்களுக்கு தீர்வு காணாத அரசு - கண்டன ஆர்ப்பாட்டம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இபிஎஸ் அழைப்பு..

 
eps

வனப் பகுதிவாழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணாத  திமுக அரசைக் கண்டித்து, வருகிற 30ம் தேதி  மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திமுக அரசு, மலைவாழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதி எண். 368ன்படி,  தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வனவளம் சார்ந்த மற்றும் வனப் பகுதி மக்களின் அன்றாட மற்றும் நெடுங்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண "வன ஆணையம்' அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 16 மாதங்கள் கடந்த பின்னும், வனப் பகுதி மக்களின் நெடுங்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வண்ணம் இதுவரை எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. குறிப்பாக, நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பல்வேறு நிலம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளன. மேலும், அரசு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்தும்  அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

dmk

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின்படி, வன வளம் சார்ந்த மற்றும் வனப் பகுதி மக்களின் அன்றாட, நெடுங்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும்; அரசு தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், நீலகிரி மாவட்ட அனைத்திந்திய அதிமுக சார்பில், 30.8.2022 - செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில், கூடலூர் நகராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து மாபெரும் கண்டனப் பேரணி தொடங்கி, கூடலூர் காந்தி சிலை அருகில் நிறைவடைந்து, அங்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

போராட்டம் அறிவிப்பு

இந்த கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான திரு. S.P. வேலுமணி, M.L.A.,  தலைமையிலும்; நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.  மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில், அதிமுக   நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே போல், மகளிர் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.