அதிமுக அலுவலகத்திற்கு வைக்கபட்ட சீலை அகற்ற கோரி இபிஎஸ் மனு

 
eps

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் வைத்த சீலை அகற்ற கோரி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று  ஓ. பன்னீர்செல்வம் தரப்பும்,  எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.  இதில் கல்வீச்சு, அடிதடி, கத்திக்குத்து உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில் வாகனங்களும்  சேதப்படுத்தப்பட்டது.  50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  இந்த விவகாரத்தில் தற்போது 14 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.  இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் வருவாய் துறையினர் உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு வந்து அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். வேறு எந்தவிதமான அசம்பாவிதங்கள்  நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய, வரும் 27ல், இரு தரப்பினரும் நேரிலோ அல்லது வழக்கறிஞர்கள் வாயிலாக ஆஜராக வேண்டும் என தென் சென்னை கோட்டாட்சியரான ஆர்.டி.ஓ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

high court

இந்நிலையில்,  அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் வைத்த சீலை அகற்ற கோரி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே அலுவலக சீலை அகற்ற கோரி மனுவை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.