மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்காக ஆட்சி நடத்துகிறார் - இபிஎஸ் குற்றச்சாட்டு

 
eps

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திற்காக மட்டுமே ஆட்சி நடத்தி வருவதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அ.தி.மு.க., சார்பில்  வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் மருதராஜ், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஸ்டாலின் குடும்பத்தினருக்காக ஆட்சி நடத்துகிறார். அ.தி.மு.க., ஜனநாயக கட்சி. இலங்கையின் இன்றைய நிலையை மனதில் வைத்து கொண்டு ஸ்டாலின் ஆட்சி நடத்த வேண்டும். விலைவாசி உயர்வு குறித்து கவலைப்படாமல் ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்துகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஸ்டாலின் முதல்வராக உள்ளார்.

eps

தொடர்ந்து பேசிய அவர், ஆட்சிக்கு வந்து 14 மாதங்களாகியும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு எந்த நல்ல திட்டமும் நிறைவேற்றவில்லை. அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்கள் பிரச்னைகளை குறித்து சிந்திக்கும் கட்சி அ.தி.மு.க., மக்கள் காவிரி வெள்ளத்தில் சிக்கிய போது அரசு சார்பில் யாரும் பார்க்கவில்லை. ஸ்டாலினுடன் இணைந்து அ.தி.மு.க.,விற்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர்கள் கோயிலாக கருதும் அ.தி.மு.க., தலைமை அலுவலக கதவை காலால் உதைத்து உள்ளே சென்று அங்குள்ள பொருட்களை எடுத்து சென்றனர். திருட்டுத்தனமாக அவற்றை எடுத்த சென்றது யார் என தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை தமிழக அரசு.பலம் பொருந்திய அ.தி.மு.க., விற்கே இந்நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை மோசமாக உள்ளது. இந்த மக்கள் விரோத அரசு எப்போது முடியும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இவ்வாறு பேசினார்.