அதிமுக பொதுக்குழு வழக்கு - எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல்

 
ep

அதிமுக பொதுக்குழு வழக்கில், எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளாது. 

கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தார். எடப்பாடி பழனிசாமி, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்து, தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை ரத்து செய்தது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  வழக்கை விசாரித்து நீதிபதிகள்  ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடியும் வரை  அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த மனு மீதான விசாரணையின் போது,  எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நீதிபதிகள் அமர்வு  உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

supreme court


இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், " நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓ.பன்னீர்செல்வம் கூறுவது ஏற்புடையதல்ல. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்பட விடாமல் ஓ.பன்னீர்செல்வம் தடுத்து வருகிறார். தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலயே, அதன் செயல்பாடுகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டை விதித்து வருகிறார்" என்று கூடுதல் மனுவில் ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றம்சாட்டினார். இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.