திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது - இபிஎஸ் குற்றச்சாட்டு

 
eps

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை நிறுத்திவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  

சேலம் மாவட்டம் ஓமலூர்-தாரமங்கலம் சாலையில் அமைந்துள்ள வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. முதியோர் இல்ல திறப்பு விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்,  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய அவர் கூறியதாவது: அம்மா இருந்தபோது, ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள், வயதானவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வழங்கி, முதியோர் உதவித்தொகை வழங்கினார். இதையடுத்து அம்மா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதியோர் உதவித்தொகை பெற கிடைக்கப்பெற வழியற்றதை கேள்விப்பட்டு நான், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழகம் முழுவதும் தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு வழங்கினேன். அதன் வாயிலாக கிட்டத்தட்ட 4 லட்சம் முதியோர்களுக்கு அம்மா அரசு அறிவித்த முதியோர் உதவித்தொகை கிடைக்கப்பெற்றது. 

ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அந்த முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை நிறுத்திவிட்டது. முதியோர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர்கள் உணவு உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. அரசு, அந்த திட்டத்தை அமல்படுத்தி முதியோர் உதவித்தொகை வழங்கியது. முதியோர்களை மறந்து விடாதீர்கள், கைவிட்டு விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.