திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - கொட்டும் மழையிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

 
eps eps

சேலம் மாவட்டம் ஆத்தூரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். 

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றிற்கு எதிராக   தி.மு.க. அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.  இருப்பினும் தொடர் மழை மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கு பதிலாக வருகின்ற 21 ஆம் தேதி அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர். இளங்கோவன் தலைமை தாங்கினார். ஜெயசங்கரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஆத்தூர் நகர செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது அங்கு மழை பெய்தது. இருந்த போதிலும் அவர் கொட்டும் மழையிலும் திமுக அரசை கண்டித்து பேசினார்.