ஆளுநரை வைத்துக்கொண்டு முதலமைச்சர் அவ்வாறு பேசியது அநாகரீகமானது - இபிஎஸ் பேட்டி

 
EPS

ஆளுநரை அமர வைத்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேசியது மரபுக்கு எதிரானது, அநாகரீகமானது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்நிலையில், திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டை தமிழகம் என்று தான் அழைக்க வேண்டும் என கூறிய ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த விவகாரத்தை எழுப்பி திமுக கூட்டணி கட்சிகளான, விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.  மேலும் ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, த.வா.க உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனிடையே ஆளுநரின் உரையை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து பாதியில் வெளியேறினார். 

assembly

இதனிடையே சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: ஆளுநர் உரை என்பது ஆண்டு தொடக்கத்தில் அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள், கொள்கைகள் பற்றியதாகும். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் புதிய பெரிய திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை. அரசும், முதலமைச்சரும் தங்கள் முதுகை தாங்களே தட்டிக்கொண்டு ஆளுநர் மூலமாக சபாஷ் போட்டுக் கொண்டுள்ளனர்.  அச்சிடப்பட்ட ஆளுநர் உரை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அது முதலமைச்சருக்கும் பொருந்தும். ஆளுநரை அமர வைத்து கொண்டு முதலமைச்சர் அவ்வாறு பேசியது மரபுக்கு எதிரானது. அநாகரீகமானது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. போதை பொருள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.