பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து ஜன.2-ம் தேதி ஆர்ப்பாட்டம் - இபிஎஸ் அறிவிப்பு

 
eps

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜன.2-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசு, மக்கள் அனைவரும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகும் வகையில் பல்வேறு செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய ஆட்சிக் காலங்களிலும், அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற எனது ஆட்சியிலும், ஆண்டுதோறும் தைப் பொங்கலை முன்னிட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், சர்க்கரை, அரிசி, செங்கரும்பு, ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவது வழக்கம்.

விவசாயப் பெருங்குடி மக்கள் இந்த விடியா ஆட்சியில் பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்து வரும் இவ்வேளையில், 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட இருக்கும் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, அரசின் சார்பில் செங்கரும்பை கொள்முதல் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் செங்கரும்பை விளைவித்துள்ள நிலையில், தற்போதைய அரசின் அறிவிப்பால் விவசாயப் பெருங்குடி மக்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். 

eps

பொதுமக்களும், விவசாயப் பெருமக்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ள இச்சூழ்நிலையில், அரசின் சார்பில் வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பு குறித்து, விடியா திமுக அரசின் அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, வெல்லம், கரும்பு, முந்திரி போன்ற பொருட்களை வழங்கியபோது, அதன் தரம் குறித்து பல்வேறு புகார்கள் வந்ததால், இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் இதுபோன்ற பொருட்கள் வழங்கப்படவில்லை என பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில்,பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, செங்கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ள விடியா திமுக அரசைக் கண்டித்தும்;திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, பொங்கல் பரிசாக மக்களுக்கு 5,000/- ரூபாய் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டபடி, தற்போது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5,000/- ரூபாய் வழங்க வலியுறுத்தியும்; விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்து, மக்களுக்கு வழங்க வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விவசாயப் பிரிவின் சார்பில், வருகின்ற 2.1.2023 -திங்கட் கிழமை காலை 10 மணியளவில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை நகரம், அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. கே.பி. முனுசாமி, M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. பி. தங்கமணி, M.L.A., ஆகியோர் தலைமையிலும் நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.