இடைத்தேர்தல் - வயதானவர்கள், மாற்று திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு

 
vote

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வயதானவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மார்ச் 02ம் தேதி அன்று அறிவிக்கப்படவுள்ளன. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தீவிரமாகி வருஇன்றன. இதேபோல் தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்த தயாராகி வருகிறது. இந்த தேர்தலுக்கு 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 500 கட்டுப்பாட்டு கருவிகள், 500 விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தேர்தலில் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை தபால் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை அவர்கள் மாற்றுத்திறனாளிகள் தான் என்பதற்கு தகுந்த அரசு சான்றிதழ் நகல் வழங்க வேண்டும். கொரோனா தொற்று உள்ளவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், சுகாதார அலுவலரிடம் இருந்து பெற்ற சான்றிதழை வழங்க வேண்டும். தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவம் 12 டி இன்று முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.