”ஸ்டாலின் கல்லா பெட்டியைதான் திறக்கிறார், மனு பெட்டியை திறப்பதில்லை”- ஜெயக்குமார்

 
jayakumar

 மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு பொதுமக்களின் மனுக்களை பார்ப்பது கிடையாது எனவும், கல்லா பெட்டியைதான் பார்ப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில் நிபந்தனை ஜாமினில் சென்னை ராயபுரம் காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசியதாவது: எதிர்கட்சிகள் கேள்விக்கு ஜனநாயக ரீதியாக பதில் சொல்ல முடியாத  விடியாத அரசு  பொய் வழக்குகள் போடுகின்றனர். அதிமுக அடக்குமுறைக்கும் , சிறைக்கும் அஞ்சாது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். பூனை கண்மூடினால் உலகம் இருண்டுவிட்டதாக நினைத்துக் கொள்வது போல ஸ்டாலின் நடந்து கொள்கிறார்.என்னுடைய கையெழுத்து இந்த அரசாங்கத்திற்கு ரொம்பவும் தேவையாக இருக்கிறது போல, அதனால்தான் வழக்குகளால்  தினம்தோறும் காவல்நிலையத்தில் கையெழுத்து போடுகிறேன். 6 மாதம் நடந்த கண்காட்சியில் இறுதி வாரத்தில் அரங்கு திறக்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின்தான். 

jayakumar

ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு பொதுமக்களின் மனுக்களை பார்ப்பது கிடையாது, கல்லா பெட்டியைதான் திறக்கிறார், மனு பெட்டியை திறப்பதில்லை. சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. மக்களுக்கான பணிகளை செய்வதைவிட அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்பதே திமுகவின் ஒரே பணியாக இருக்கிறது. எதிர்கட்சிகளை பழிவாங்குவதற்கு காவல்துறை பயன்படுத்தப்படுவதால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 
அரசு ஊழியர்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் தேனாறும் பாலாறும்  ஓடும் என்றார்கள். பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளனர் . இனி வரும் நாட்களில் சொத்து வரி , பால் , மின்சார , பேருந்து கட்டணங்களை உயர்த்துவார்கள். சசிகலாவின் சுற்றுப்பயணத்தால் எந்த  தாக்கமும்  இருக்காது , இந்தியா சுதந்திர நாடு ,  யாரும் எங்கும் செல்லலலாம். எனவே சசிகலாவும் சுதந்திர பறாவையாக எங்கு வேண்டுமானாலும் சுற்றலாம் என்றார்.