இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பணி : டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

 
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பதவிக்கு வருகிற 5ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என  டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிகளில் தொகுதி 7 ‘ஏ’ பணியில் அடங்கிய செயல் அலுவலர் (கிரேடு1) பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு விண்ணப்பங்கள் கோரியிருந்தது. இந்த பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த ஏப்ரல் 23ம், 24ம் தேதிகளில் நடந்தது. கடந்த 18ம் தேதி நேர்முக தேர்வு நடந்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ. 1 லட்சம்  அபராதம் ?? - வழக்கை ஏற்றது சென்னை உயர்நீதிமன்றம்..

இந்த பதவிக்கான கலந்தாய்வு சென்னை-600003, தேர்வாணைய சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 5ம் தேதி நடைபெற உள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரம் அடங்கிய அழைப்புக் கடிதத்தை தரவரிசைப் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர் தேர்வாணைய இணைய தளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ், இமெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

கலந்தாய்வுக்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு காலிப் பணியிடம், வகுப்பு, இன சுழற்சி ஆகியவற்றிற்கு உட்பட்டு தரவரிசையின்படி அனுமதிக்கப்படுவர். மேலும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர் கலந்தாய்விற்கு குறித்த தேதி மற்றும் நேரத்தில் வர தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.