கட்டாய கொரோனா பரிசோதனைக்கு விரைவில் விலக்கு.. - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

 
ma Subramanian

தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு மிகவிரைவில் தளர்வு அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

திமுகவின் இளைஞர் அணி செயலாளரும்,   சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இதனையொட்டி சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஐந்து விளக்கு பகுதியில் குடிசைவாழ் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில்  மாபெரும் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதனை  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், “ உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பில் ஆரவாரம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.  

உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையான நாளாக அமையும் எனவும்,  அடுத்த பிறந்தநாளை அமைச்சராக உதயநிதி கொண்டாடினால் நல்லது. அமைச்சராகும் அனைத்து தகுதியும் அவருக்கு இருக்கிறது.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடித்தளம் வலுவாக இருக்க 30 லட்சம் இளைஞர் உழைக்கின்ற அமைப்பு திமுக இளைஞரணி அமைப்பு, திமுக இளைஞர் அணி அமைப்பு பிற கட்சிகள் போல சம்பிரதாயத்திற்கு இருக்கும் அமைப்பு அல்ல சமுதாயத்திற்காக உழைக்கும் அமைப்பு.  அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சீனாவில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு இருந்தாலும், கொரோனா பூஜ்ஜிய நிலையை நோக்கியே செல்கிறது.  சர்வதேச விமான நிலையங்களில் கடைபிடிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.  அதே போல் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் தளர்வு அளிக்கப்படும்.  முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கு இன்சூரன்ஸ் பணம் சென்று சேர்வதில் எந்த சிக்கலும் இல்லை.  அனைத்து மருத்துவமனைகளிலும் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்..