தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 4000 டன் மூலப்பொருட்கள் எரிந்து நாசம்

 
theni fire

தேனி மாவட்டம் பெரியகுளம் முருகமலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 4000 டன் மூலப்பொருட்கள் எரிந்து நாசமாகின. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் குரோரைட் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தேங்காய் மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நார்களை பதப்படுத்தி சனல் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் தேங்காய் மட்டையில் இருந்து பிரித்தெடுத்து போடப்பட்டுள்ள  தென்னை நார்களில் திடீரென தீப்பற்றியது.

theni fire

இந்தத் தீ வேகமாக பரவி அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த 4000 டன் மதிப்பிலான நார் குவியலில் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். தீ விபத்து குறித்து உடனடியாக பெரியகுளம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் தொழிற்சாலை ஊழியர்களும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இரவு வரை தீயை அணைக்கும் பணி நடைபெற்ற நிலையில், நீண்ட போராட்டடத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. மூன்று ஜேசிபி இயந்திரங்களை கொண்டு தீப்பற்றி எரியும் நார் குவியலை கிளறிவிட்டு நீரைப் பாய்ச்சி தீயை அணைத்தனர்.