"மதுரையில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ரோமானிய நாணயங்கள்" - எம்.பி., சு. வெங்கடேசன் பெருமிதம்!!

 
tn

2000 ஆண்டு பழமையான சீஸர் காலத்து நாணயங்கள் எங்கும் சிதறிக்கிடக்கும் மாநகரம் மதுரை என்று  சு. வெங்கடேசன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூறு ஆண்டுகளுக்கு முன்பு 'மெஜுரா கோட்ஸ்'  மில்லைக் கட்டுவதற்காக வானம்தோண்டியபொழுது பழங்கால நாணயங்கள் சில கிடைத்துள்ளன.'அவை என்ன நாணயங்கள், எத்தனை ஆண்டுகள் பழையவை' என்று தெரியாத மெஜுரா மில் அதிகாரிகள் அந்த நாணயங்களை அமெரிக்கன் மிஷனரிமார்களிடம் கொடுத்துள்ளனர்.  மிஷனரிகள் அவற்றைச் சில காலம் வைத்திருந்தனர். அவர்களுள் ஒருவர் அவற்றை  ஆராய்ந்து, அவை ரோமாபுரியை ஆட்சி செய்த சீஸர் காலத்து நாணயங்கள் என்பதைக் கண்டறிந்து, அவற்றை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கொடுத்து,  பாதுகாத்து வைக்கச்சொல்லியுள்ளார். கல்லூரிக்கு வழங்கப்பட்ட அந்த ரோமாபுரி நாணயங்கள் பதிவு செய்துள்ளனர்.

tn

காவல்கோட்டம் நாவலுக்கான தேடலில் இருந்தபோது, இந்த நாணயங்களைக் குறித்து மிஷனரிமார்களின் நூலொன்றில் படித்தேன்.அதன் பிறகு மதுரையில் ஒன்றிரண்டு கூட்டங்களில் பேசும்போது, "மெஜுரா மில் கட்டிடங்கட்ட வானம்தோண்டும் போதே சீஸர் கால நாணயம் கிடைத்துள்ளது, மதுரையின் அகழாய்வு வரலாறு ஆலை கட்டும் போதே தொடங்கிவிட்டது" என்று பேசியுள்ளேன்.சாகித்ய அகாதமி விருது பெற்ற பின்னர் அமெரிக்கன் கல்லூரியில் நடந்த நிகழ்வில் பங்கெடுத்துப் பேசியபோது, மதுரையில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ரோமாபுரி நாணயங்கள் உங்களது கல்லூரியில்தான் இருப்பதாக மிஷனரிமார்களின் குறிப்புகளில் உள்ளது. அதனைக் கண்டறியுங்கள் என்று கூறினேன்.நாடாளுமன்ற உறுப்பினரான பின் அமெரிக்கன் கல்லூரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். பங்கெடுக்கும் போதெல்லாம் சீஸர் நாணயத்தைப் பற்றி பேசாமல் விட்டதில்லை. கல்லூரியின் முதல்வர் திருமிகு தவமணி கிரிஸ்டோபர் அவர்களும் அதைப்பற்றி அக்கறையோடு விசாரிப்பார்.

tn

கடந்த வாரம் பூவுலக நண்பர்கள் கல்லூரியோடு இணைந்து “இளைஞரும் காலநிலை மாற்றமும்” என்ற முழுநாள் கருத்தரங்கை நடத்தினர். நான் அதனைத் தொடக்கிவைத்தேன். நிறைவு நிகழ்வில் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கினேன்.மாலையில், கருத்தரங்கு முடிந்ததும் கல்லூரியில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற அருங்காட்சியகத்தைப் பார்வையிட கல்லூரி முதல்வர் அழைத்தார். நானும் பூவுலகுன் நண்பர்கள் கோ. சுந்தர் ராஜனும் சென்றோம். மிக முக்கியமான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த அருங்காட்சியக பணிகள் முழுமை அடைகிறபொழுது மதுரைக்கான சிறப்புகளில் ஒன்றாக அது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.அருங்காட்சியகத்தைப் பார்த்த பின்னர், மதுரையின் மிகப்பழமையான நூலகமான அமெரிக்கன் கல்லூரி நூலகத்துக்குள் போனோம். கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல பொருள்கள் பாதுகாப்பாக அங்கு வைக்கப்பட்டுள்ளது பற்றிச் சொல்லியபடி முதல்வர் என்னை அங்கு அழைத்துச்சென்றார். பழங்காலத்து ஆயுதங்கள், கலைப்பொருட்கள் எல்லாம் வைக்கப்படிருந்தன.அவற்றைப் பார்த்தபடியே ரோமானிய நாணயங்கள் பற்றி மீண்டும் முதல்வரிடம் கூறினேன். “கல்லூரிக்குத்தான் அந்த நாணயங்களைக் கொடுத்ததாக எழுதியுள்ளனர். எனவே அந்த நாணயங்கள் இங்குதான் இருக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே வந்தேன்.ஒரு 'கண்ணாடிப்பெட்டியில் பழங்கால நாணயங்கள் நிறைய்ய குவிக்கப்பட்டு இருந்தன. வரலாற்றின் மிக முக்கிய அடையாளங்களான அந்த நாணயங்களைப் பார்த்ததும் கல்லூரி முதல்வரிடம் கூறினேன். “சார், சந்தேகமேயில்லை. சீஸர் காலத்து நாணயங்கள் இதில்தான் இருக்க வேண்டும். அடுத்த முறை வரும்போது நாணயவியலாளரை அழைத்து வருகிறேன். அந்த நாணயத்தைக் கண்டறிந்து விடுவோம்" என்று கூறினேன். முதல்வரும் மகிழ்வோடு சரி என்றார். சிறிது தள்ளி கண்ணாடிப் பெட்டி ஒன்றில் மிகப்பழைய புகைப்படம் ஒன்று இருந்தது. என்னவென்று தேடிப்பார்த்துப் படித்தேன். ஒரு கணம் மனம் திகைப்பில் ஆழ்ந்தது. 110 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த கையெழுத்தினை மீண்டும் ஒருமுறை படித்தேன். “மெஜுரா  மில் கட்டிடம் கட்ட வானம் தோண்டும் பொழுது எடுக்கப்பட்ட ரோம் நாணயங்கள்-1915” என்று எழுதப்பட்டிருந்தது.



மகிழ்ச்சியில் மனம் துள்ளியது. அருகில் இருந்த கல்லூரியின் முதல்வரை அழைத்து அந்த கையெழுத்துகளைப்  படித்து பாருங்கள் என்றேன். அவரும் படித்துவிட்டு பெருமகிழ்வடைந்தார். “சார். நீங்கள் மெஜுரா மில் கட்டிடம் கட்டிய காலத்தில் கிடைத்த நாணயங்கள் கல்லூரியில்தான் இருக்கின்றன என்று சொன்ன பொழுதெல்லாம் கூட, "அவையெல்லாம் எங்கே இருக்கின்றன வோ, இருக்கின்றதோ இல்லையோ! இந்த செய்தியே உண்மையோ இல்லையோ என்றெல்லாம் யோசித்ததுண்டு. ஆனால் இன்று நீங்களே வந்து அதனை கண்டறிந்துவிட்டீர்கள். நீங்கள் சொன்ன செய்தி அப்படியே எழுதப்பட்டிருக்கிறதே” என்று கூறி பெருமகிழ்வடைந்தார்.மதுரையில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நாணயங்கள் மீண்டும் காணக்கிடைத்தது பெருமகிழ்வு.காணுமிடமெங்கும் வரலாற்று அடையாளங்களை நிறைத்து வைத்திருக்கும் இம்மாமதுரையின் வரலாற்றை முழுமையாக  அறிந்து கொள்ளுதல் எளிதல்ல." என்று குறிப்பிட்டுள்ளார்.