படகு சேதமானதால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் - மீட்டு கரைசேர்த்த சக மீனவர்கள்

 
boat

ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் சென்ற விசைப்படகு திடீரென சேதமாகி கடலில் மூழ்கிய நிலையில், கடலில் தத்தளித்த 7 மீனவர்களை மற்றொரு படகில் சென்ற சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 

ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு விசைப்படகில் வழக்கம் போல் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளனர். வலைகளை விரித்து பீன்பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென படகு சேதம் அடைந்துள்ளது. படகு சேதமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் வலையில் பிடிக்கப்பட்ட மீன்களை எடுத்துக்கொண்டு கரைக்கு திரும்பி விடலாம் என எண்ணியுள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் சேதம் அதிகமாக படகு கடலில் மூழ்க தொடங்கியுள்ளது. இதனால் மீனவர்கள் செய்வதறியாமல் திணறிய நிலையில், படகு கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் சென்றது. இதனையடுத்து படகில் இருந்து கீழே குதித்த 7 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்து உயிருக்கு போராடியுள்ளனர். 

இதனிடையே கடலில் 7 பேர் தத்தளிப்பத்தை பார்த்த மற்றொரு படகில் சென்ற மீனவர்கள் உடனடியாக அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். உடனடியாக சம்பவம் இடத்திற்கு சென்ற கடலில் தத்தளித்த மீனவர்களை தங்களது படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். சக மீனவர்களின் உதவியால் அந்த 7 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இருந்த போதிலும் வலையில் சிக்கிய ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் படகோடு கடலில் மூழ்கியதால் அவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.