தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு : சுருளி அருவியில் குளிக்க தடை..

 
சுருளி அருவிக்கு செல்ல தடை…


தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சுற்றுலா பயணிகள்,  பக்தர்கள் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.  லோயர்கேம்ப், கூடலூர்,  குள்ளப்பகவுண்டன்பட்டி,  சுருளியாறு மின் நிலையம் ஆகிய பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை,  ஈத்தைப்பாறை ஆகிய இடங்களில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.

மழை

இதன் காரணமாக சுருளி அருவியில் ( ஞாயிற்றுக்கிழமை)  இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.   ஆகையால்  அருவிக்கு  வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க  புலிகள் காப்பகத்தினர் தடை விதித்துள்ளனர்.  விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருவார்கள் என்பதால்,  அருவி பகுதிக்கு பொதுமக்கள் செல்லாதவாறு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்காணிப்பு பணிகளை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  அருவி

 மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, தேக்கடி ஏரி, பெரியாறு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.  இன்றைய  நிலவரப்படி ( ஞாயிறு) முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், 127.75 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 4,212 மில்லியன் கன அடியாகவும் , நீர் வரத்து விநாடிக்கு 799 கன அடியாகவும் உள்ளது. அதேபோல் அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.