மகள் இல்லாத குறை மட்டும் தான்... வேறு எந்த குறையும் இல்லை - பிரியாவின் தந்தை பேட்டி

 
priya father

தனது மகள் இறந்த பிறகு, தமிழக அரசு நிறைய உதவிகள் செய்துள்ளது எனவும், வேறு எந்த குறையும் இல்லை எனவும் மாணவி பிரியாவின் தந்தை கூறியுள்ளார். 

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி பிரியா.  இவர் கால்பந்து வீராங்கனை.   பயிற்சியின்போது காலில் சவ்வு விலகியதை அடுத்து சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு  மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறையினால் இரண்டு கால்களும் அகற்றப்பட்டு,  அதன் பிறகும் உயிரை காப்பாற்ற முடியாமல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார். மருத்துவரின் தவறான சிகிச்சையினால்  பிரியா உயிரிழந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  சம்பவம் குறித்து போலீசாரின் விசாரணையும் நடந்து வருகிறது.   துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க  தனியாக விசாரணை குழுவும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இறந்த மாணவி பிரியாவின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரியாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை, பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான ஆணை, வீடு ஆகியவற்றை வழங்கினார்.

mk stalin

இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாணவி பிரியாவின் தந்தை ரவிக்குமார் கூறியதாவது: என் மகள் பிரியா இறந்துவிட்டாள். முதல் அமைச்சர் என்னிடம், நம்ம பிரியாவை போல நிறைய குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு ஒரு காலணியையோ, மற்ற உபகரணங்களையோ வாங்கிக் கொடுங்கள். பிரியாவின் ஆத்மா சாந்தி அடையும் என்று கூறினார். என் குழந்தை இறந்த பிறகு, தமிழக அரசு நிறைய உதவிகள் செய்துள்ளது. வேறு எந்த குறையும் இல்லை. என் குழந்தைதான் போய்விட்டாள். அதுதான் எங்களது வருத்தம்" என்றார்.