நிர்வாக ரீதியாக தி.மு.க. அரசு ஸ்தம்பித்துள்ளது - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

 
rb udhyakumar

வளர்ச்சி திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளை கூட தி.மு.க. அரசால் செய்ய முடியவில்லை என குற்றம்சாட்டியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 
நிர்வாக ரீதியாக தி.மு.க. அரசு ஸ்தம்பித்துள்ளது என விமர்சித்துள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வளர்ச்சி திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளை கூட தி.மு.க., அரசால் செய்ய முடியவில்லை.எய்ம்ஸ் மருத்துவமனை, 11 மருத்துவக்கல்லுாரிகளுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் நிலம் எடுப்பு பணிகளில் சிறு சலசலப்பு கூட ஏற்படவில்லை. ஆனால் சென்னை அருகே பரந்துார் புதிய விமான நிலையப்பணி வாழ்வாதாரத்தை எந்தளவு கேள்விக்குறியாக்கி உள்ளது என்பதை மக்களே நேரடியாக பார்க்கின்றனர். நிலம் எடுப்பு, மக்களை வாட்டி வதைக்கும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, டீசல் பற்றாக்குறையால் பஸ்கள் நிறுத்தம் என நிர்வாகத்தில் தி.மு.க., அரசு ஸ்தம்பித்து போயுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட எட்டுவழிச்சாலையை அன்று எதிர்த்த தி.மு.க., இன்று காலத்தின் கட்டாயம் என பேசுகிறது. டாஸ்மாக் கடையை மூட குடும்பத்தோடு போராட்டம் நடத்திவிட்டு தற்போது பள்ளி, கல்லுாரி, கோயில்களுக்கு அருகே கூட கடைகளை திறக்கின்றனர். இதையெல்லாம் நினைவூட்டும் கடமை அ.தி.மு.க.,விற்கு உண்டு.  தி.மு.க. அரசை தோலுரித்துக் காட்டுவதற்கும், மீண்டும் உத்வேகத்துடன் செயல்பட்டு பழனிசாமியை முதல்வராக்குவதிலும் தொண்டர்கள் தயாராகி விட்டனர். இவ்வாறு கூறினார்.