இந்தோனேசியா சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்...

 
ஜிகே வாசன்

இந்தோனேசியா அரசு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி  தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் தற்போது திசைமாறி இந்தோனேசியா கடல் எல்லைக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் நேற்று அந்நாட்டு கடற்படையினரால்  சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்கள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க சென்றபோது இந்தோனேசியா கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் இதுபோல் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. இது மிகவும் கண்டிக்கதக்கது. தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதும், படகுகளை சேதப்படுத்துவதும் வழக்கமாகி வருகிறது. இச்செயல் தமிழக மீனவர்கள் இடையே தொடர்ந்து மிகுந்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

வதந்திகளைப் புறக்கணிப்போம்… கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்போம்… கொரோனாவை ஒழிப்போம்! – ஜி.கே.வாசன் அறிவுரை

மத்திய வெளியுறவுத்துறை உடனடியாக இந்தோனேசியா அரசுடன் பேசி கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகான மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.