வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ. 25 அதிகரிப்பு..

 
வர்த்தக சிலிண்டர் விலை

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக குறைக்கப்பட்டு வந்த நிலையில், 2023ம் ஆண்டின் முதல் நாளிலேயே ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.

  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோலிய பொருட்களின் விலையை  எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில் 15 நாட்களுக்கு ஒருமுறை  சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை மாறுபடும். அதேபோல் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை விலையில் மாற்றம் செய்யப்படும் . பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்  தினமும் மாற்றியமைக்கப்படும்.

கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு!

2023ம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி மாதத்துக்கான எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதில், வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் விலை ரூ. 25 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ரூ.1,892க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, இன்று முதல் ரூ.1,917க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த விலையேற்றத்தால்,  உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் போன்ற வணிகம் சார்ந்த தொழில்கள் பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது.  வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.