தீபாவளி விடுமுறை என மழைநீர் வடிகால் பணிகளை நிறுத்தக் கூடாது - இறையன்பு அறிவுறுத்தல்..

 
 இறையன்பு

தீபாவளி விடுமுறை என மழை நீர் வடிகால்கள் கட்டுமானப் பணிகளை நிறுத்தி விடக் கூடாது என்றும்,  மாற்றுப் பணியாளர்களை கொண்டு துரிதமாக பணிகளை முடிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

பருவமழைக் காலங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னை மாநகராட்சி முழுவதும் மழை நீர் வடிகால்கள் அமைக்கும்  பணி  நடைபெற்று வருகின்றன.  சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் 277.04 கோடி மதிப்பில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் 295.73 கோடி செலவில்  107.57 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 27.21 கோடியில் 10 கிமீ நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் 8.26 கோடியில் 1.05 கிமீ நீளத்திற்கும்,உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் 120 கோடியில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழைநீர்

இதில் சிங்காரச் சென்னை திட்டத்தின் முதற்கட்ட வடிகால்  பணி முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில்,  மீதமுள்ள 2ம்  கட்ட பணிகளையும் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக துரிதமாக முடிக்க  வேண்டும் என முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.  இந்நிலையில் சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் கட்டுமான பணி  மற்றும் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு  இன்று  நேரில் ஆய்வு செய்தார்.  அப்போது  நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ்தாஸ்மினா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உட்பட ஏராளமான அதிகாரிகள் உடனிருந்தனர்.

தமிழக அரசு

ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தலைமைச் செயலாளர் ,  தீபாவளி பண்டிகை விடுமுறையை காரணம் கூறி மழைநீர் வடிகால்கள் கட்டுமானப் பணிகளை நிறுத்திவிடக் கூடாது என்றும்,   மாற்றுப் பணியாளர்களை கொண்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.  அப்போது, மழைநீர் வடிகால்கள் பணிகளை விரைந்து முடித்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தலைமைச் செயலாளர் இறையன்புவிடம்  வேண்டுகோள் விடுத்தனர்.