"இதுவே பாரதத்தின் பொன்னான நேரம்" - தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்!!

 
National Flag

ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை ஏற்றி, சுதந்திர திருநாளின் 75-ம் ஆண்டை கொண்டாடுங்கள் என்று தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நமக்கெல்லாம் சிறப்பான தருணமாகும். நாட்டின் வளமான வரலாறுமற்றும் சுதந்திரத்தின் 75-ம்ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். இதைத்தான் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா என்று அழைக்கிறோம்.

rn ravi

தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள், இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்தியதுடன், இன்னுயிரையும் ஈந்துள்ளனர். அவர்களின் தியாகத்துக்கு இந்த நாடு என்றும் நன்றியுடன் இருக்கிறது. நாம் பெற்ற சுதந்திரத்தை நமது மூவர்ண தேசியக் கொடி பிரதிபலிக்கிறது. இது, விடுதலைப் போராட்ட வீரர்களின் ரத்தம், தியாகத்தில் பிறந்தது. நமது வீரம் மிக்க முன்னோடிகளான பூலித்தேவன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, ஒண்டிவீரன், முத்து குடும்பனார், வெண்ணி காலாடி, சுந்தரலிங்கம், பெரிய காலாடி, ஊமைத்துரை, கருப்ப சேர்வை மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிக்காக உயிர் நீத்துள்ளனர். வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், வ.வே.சு.ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி, திருப்பூர் குமரன், மகாகவிசுப்பிரமணிய பாரதியார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட ஏராளமான நமது முன்னோடிகள், கொடிக்காக வார்த்தையில் அடங்காத துன்பங்களை சந்தித்துள்ளனர்.

இந்த கொடியானது வெறும் சின்னம் என்பதை தாண்டி மிகவும் சிறப்பான ஒன்றாகும்.இந்த தீரம்மிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வரும் ஆகஸ்ட்13 முதல் 15-ம் தேதி வரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து வீடுகளிலும், வெளிநாடுகளில் இந்தியர்கள் வாழும் வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற நம் நாடு முடிவெடுத்துள்ளது. ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தருணத்தில், பிரதமர் கூறியவற்றை நினைவுகூர்கிறேன். அதாவது ‘‘எண்ணற்ற கரங்களின் ஆற்றல் இங்கு உள்ளது. எங்கும் நாட்டுப்பற்று பரவியுள்ளது. நீங்கள்எழுந்து நின்று, மூவர்ணக் கொடியை அசையுங்கள். பாரதத்தை ஒளிமயமாக்குங்கள்.

Modi - NITI Aayog

உங்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. நீங்கள் எழுந்து உழைக்கத் தொடங்குங்கள். உங்கள் திறனை அறிந்து கொள்ளுங்கள், உங்கள் கடமையை உணருங்கள். இதுவே பாரதத்தின் பொன்னான நேரம். இதுவே நேரம், சரியான நேரம்’’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எனவே, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவில் அனைவரும் வீடுகளில் மூவர்ணக் கொடியைஏற்றுங்கள்" என்று வலியுறுத்தியுள்ளார்.